பக்கங்கள்

செவ்வாய், 16 மார்ச், 2010

தமிழே !



சொந்த மொருவரு மில்லை!
....சொல்லிடத் தகுவது மில்லை!
தந்த அழகினை உரைக்க
....தரையினில் உறவெனக் கில்லை!
எந்தன் மனத்தினை யாளும்
....இணையிலா மொழியென வாழும்
இந்தி ரவுலகும் போற்றி
....ஏத்திட விளைந்திடு தமிழே..!

சந்தச் சுவைமிகுந் தூறும்
....சந்தனக் கனிகளின் சாறும்
எந்தக் காலமும் ஆளும்
....எத்திசை நோக்கினும் வாழும்
நிந்தன் துணையொடு நானும்
....நித்தமும் வாழ்ந்திடல் வேண்டும்!
வந்தென் நாவினில் அமர்ந்து
....வழங்குக பாக்களைத் தாயே.!

--

தமிழ்த்தாய்..!



தமிழைப் பருகித் தமிழைப் பருகித்
தவித்துப் போகின்றேன்!
உமிழ்நீர் சுவையும் ஊறும் அமுதும்
தேனுங் கசப்பாகும்!
உமையாள் பாதி உடையார் போலே
உன்னால் வலிவுற்றேன்!
எமையாள் பவளே எந்தாய் நீயே
எவர்க்கும் இறையானாய்!

--

தமிழே போற்றி..!


கந்தன் நகையினிற் பிறந்து
காலவே கத்தினில் வளர்ந்து
சந்தம் ஆயிரம் புனைந்து
சாவினைத் தூக்கியே எறிந்து
அந்தம் ஆதியும் அற்றே
அலைகடல் போலுரு வெடுத்துத்
தந்தத் தூய்நிற மாகித்
தரணியை ஆண்டிடுந் தாயே!
"

காதல்..!!காதல்..!!காதல்..!!



காதல் - 1

காதல் கொண்டிடக் கண்களின் மணிகளுங்
கனவுக ளிறைத்தல்காண்!
காதல் கொண்டிடக் காண்பவை அழகுடன்
காட்சியாய்த் தெரியுங்காண்!
காதல் கொண்டிடக் கடினமும் எளிதெனக்
கருத்தினில் தோன்றுங்காண்!
காதல் கொண்டிடக் கனவுகள் கிளைத்திடக்
கதவுகள் திறக்குங்காண்!

காதல் - 2

காதல் கொண்டிடக் கவலைக ளொழிந்து
கதவுகள் திறக்காதோ!
காதல் கொண்டிடக் கதிரவ னொளியென
கண்களு மொளிராதோ!
காதல் கொண்டிடக் கருத்தினி லினிதெனக்
கவிகளும் முளைக்காதோ!
காதல் கொண்டிடக் கலகமும் தீர்ந்துபின்
கனவுகள் இனிக்காதோ!

திங்கள், 1 மார்ச், 2010

மது...!!


உண‌ர்விழந் தொருவாய்ச் சோற்றையும் மலத்தையும்..
புணர்ந்தாலு மறியாது புத்தியும் பேதலித்துக்..
கொணர்ந்து தருமெமக் கயிற்றைமிகப் பிடித்து..
மணந்து கொள்ளச் செய்யு மது..!!
----------
நண்பர்களே..!! தயவு செய்து மதுவைத் தவிருங்கள்...!!
நன்றி..!!

அன்பன்.,
க.அண்ணாமலை.,

கேள்..!! மனமே..!! கேள்..!!


சந்திக்குஞ் சமயத்திற் சிந்திக்க மறந்துஅஞ்சி
நிந்திக்கும் அறிவை நித்தங் கேளாமல்-மட நெஞ்சே
பந்திக்கு முந்திப் புகுவதுபோல் பாய்ந்துசென்று
வந்தவளைத் தேடாதே கேள்..!!

அந்திக்குத் தத்தித்தத் தித்தாவும் பறவைபோல்
மந்திக்கு மறுவடிவாய்க் கிளைதாவும் மனமே நில்..!!
சிந்திக்க மறந்துசில் வண்டாகிரீங் கரித்து
தந்தியனுப் பிடாதே கேள்..!!

உந்தியுந் தியேயுற வாடிடத் தள்ளினும்..
தொந்திநி றைந்துவிட்டால றுசுவையு மறியாது..
ஐந்திரண்டு திங்களிற் றத்தனையுங் கசக்குமே..
இந்திரிய மடக்கிவாழ் கேள்..!!

"

பேயாயுழலுஞ் சிறுமனமே என்ற கருத்தினால் எம்
கருத்தில் உதித்த‌ பாடலிது..!!
மனம் ஒரு மரம்விட்டு மரம் தாவும் குரங்கு ..!!
அதைக் கட்டுக்குள் வைத்திருப்பவனே மனிதனாகவும்,
பின்னாளில் மகானாகவும் ஆகிறான்..!!
நன்றி..!!!


அன்பன்.,
க.அண்ணாமலை.,