பக்கங்கள்

புதன், 16 பிப்ரவரி, 2011

பிரம்மனிடம் சில கேள்விகள்!



ள்ளிரவில், ஓர் நடுக்காட்டில்
நான்முகன் என்னிடம்
நன்றாய்ச் சிக்கினான்.
நானோ பொடியன்.நாயகன் அடியன்.
நழுவ விடாமல் அவனை நலம் விசாரிக்கத் துவங்கி விட்டேன்.


கேள்விகள் சிவப்பிலும்,
பதில்கள் கறுப்பிலும்.

பிறப்பால் விளைவது
பூமியில் என்ன?
பிரம்மனை நான்கேட்டேன்-கெஞ்சும்
குரலால் தான்கேட்டேன்!

இறப்பால் விளைவது
என்னஇவ் வுலகில்?
எனையே அவன்கேட்டான்- கேள்வியை
மாற்றிப் புடம்போட்டான்!

ம்குர லுக்கும்
நாயகன் செவியை
நன்றாய்ச் சாய்க்கின்றான்-உலகில்
எனையும் பார்க்கின்றான்!


எம்குர லுயர்த்தி
இன்னும் இரண்டொரு
கேள்விகள் கேட்போமே-என்னதான்
செய்வான் பார்ப்போமே!

காட்டிலும் மேட்டிலும்
கடவுளைத் தேடியோர்
கூட்டமும் அலைகிறதே?-இதனால்
குடும்பமும் தொலைகிறதே?

வீட்டினில் வைத்தெமை
வணங்கிடு போதும்
காடும் மேடெதற்கு-நீயேன்
கானகம் போவதற்கு?

சரி!இப்படி மாற்றிக்கேட்டுப் பார்ப்போம்!

ல்லறம் உள்ளவர்
துறவறம் நாடிட
உலகே வீண்தானோ?-இப்படி
உழல்வதும் சரிதானோ?


இல்லறம் துறவறம்
இரண்டும் நல்லறம்
ஆற்றினில் ஓடியபின்-நீரும்
ஆழ்கடல் அடைந்திடுமே!

(எல்லா ஆறுகளும் கடலுக்குத்தானாம்)
அப்படியா..? அடுத்ததை வீசினேன்!

பிறந்திடும் உயிர்கள்
ஓர்நாள் இறக்கும்
இறந்தபின் என்னாகும்?-சொல்லென்
வாழ்நாள் பொன்னாகும்!

சிறந்திடும் ஆழ்கடல்
சிறுதுளி தந்திடும்
மேகமென் றேயாகும்-அதுவே
மீண்டும் ஆறாகும்!

பிரம்மன் மிகப் பொறுமையுடன் பதிலளித்தான்.

ழு பிறப்பே
எவர்க்கும் என்றால்
இறைவா நீஎதற்கு?-இங்கே
நாங்கள் வணங்குதற்கு!


பாழும் மனிதா
கேள்விக ளாலே
படுத்தி யெடுப்பதுமேன் -என்னைப்
பாவியென் றாக்குவதேன்!

காத்திருந்த நேரம் வந்துவிட்டது.

த்தனை கடினம்
எங்களின் வாழ்வில்
ஏற்படுத் தும்இறைவா!-பிறந்தே
உலகில் இன்புறவா!


எத்தனை கேள்விகள்
இன்னமும் உளதோ?
என்னைப் போகவிடு!-இலையேல்
இங்கே சாகவிடு!

பிரம்மன் நோகத்தொடங்கினான்.இதைத்தானே எதிர்பார்த்தேன்.

பிரம்மன் இறந்தால்
பிறப்பது எங்கனம்?
பூமியில் பிறப்பதற்கே-பிரம்மா
இத்தனை பயமெதற்கு?

பரமன் உடுக்கையை
புரட்டுதல் போலே
புவியினை அசைப்பானே-கண்டும்
பிறந்திட நினைப்பேனோ!

தெரியாதது போல் விளித்தேன்.

னக்கும் மேலே
ஒருவன் உண்டோ
ஒருநொடி காண்பேனோ?-சிற்சில
கேள்விகள் கேட்பேனோ?


மனதை மயக்கும்
மதியுனக் கெனினும்
மயங்கிட மாட்டேனே - சாபம்
மறுமுறை கூட்டேனே!

ஏற்கனவே பெற்ற சாபத்தில் பிரம்மன் நிறைய பட்டுவிட்டான் போலும்.
போட்டேன் ஒரு கட்டளை.


போதும் பிரம்மா
பொய்களை நிறுத்து
புண்ணியம் கொடுத்துவிடு!-பூமியில்
பிறப்பினை நிறுத்திவிடு!

சற்றே புன்னகையுடன், பிரம்மன் தீர்க்கமாக என்னைப்பார்த்து சொன்னான்.

ன்மேல் என்றும்
எள்முனை தவறிலை
என்தொழில் நின்றாலும்-மனிதா
உன்தொழில் நிற்காதே!

மனிதா
உன்தொழில் நிற்காதே!

அவனே தொழிலை நிறுத்தினாலும், நாம் நிறுத்த மாட்டோமா..?
விளங்கத் தொடங்கியது..

பிரம்மன் சொன்னதில்
பிரமை பிடித்தே
பேதைமை ஆகியதே-கேள்விகள்
மறதியென் றேகியதே!


பரமனில் பிரமனில்
பாரினில் தவறிலை
பாழும் மனதினுள்ளே - பாராய்
பலவிதத் தவறுகளும்!

பாராய்
பலவிதத் தவறுகளும்!

ன்னை நானே நொந்த பொழுதில்

இடத்தை விட்டே அகன்று விட்டான்
அய்யன் நான்முகன் அறிவிற் சிறந்தவன்,
அருளன் வாணியின் அழகிய வேந்தன்!


நன்றிகள்!

தொடுப்பு:
*இது ஒருவகை இசைப்பா.
*அந்த ஓவியம் மிக அழகு!
*இனியும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடவுளிடம் கேள்விகள் கேட்கலாம்.

:)

புதன், 29 டிசம்பர், 2010

கடவுள் என்பவன் யார்?



கடவுள் என்பவன்
யாரென் றறிய
யாரைக் கேட்பேன் அறியவில்லை! - சரி
கடவுச் சீட்டு
தருபவன் யார்தான்
எங்கிருந் தென்றும் புரியவில்லை!

இசைபட ஒலிக்கும்
இன்பமுங் கொடுக்கும்
கருவியில் நாதம் எவ்வாறோ-நம்
வசைகளைப் போக்கும்
வடிவமும் மறைத்த
கடவுளும் உள்ளான் அவ்வாறே!


விண்ணையும் மண்ணையும்
விளையாட் டாய்சிறு
விளக்காய்க் காப்பதும் இறைவனென்றால்-அம்
மன்னவன் மக்களை
மாண்புற உலகினைக்
காக்க மறந்தே அழிப்பதுமேன்?

உலகினை உருக்கி
உயர்வாய்க் கொடுத்த
உத்தமன் என்றும் நல்லவனே-நிதம்
அலகினில் சிக்கிய
இரையாய் அதனை
அழித்தொழிப் பதுவும் மானிடனே!


கேள்விக ளனைத்தும்
கிளம்பும் நொடியில்
பதிலாய் மூளையில் தருவதுயார்-பொன்
தூள்களைப் போலே
என்னுள் பரவி
துயர்விடும் பதிலினைத் தருவதும்யார்?

நீரினைக் கொழிக்கும்
நிலத்தினில் பரவும்
நெடுமரம் தன்னிலும் உயிராக-அதன்
வேரென் றிருந்து
விழுதுகள் செழிக்க
வைத்திடும் இறைவன் அவனேதான்!


உன்னிலும் இருந்து
உயிரையும் இயக்கி
ஒருநொடி கேள்வியென் றாகிடுவான்-பின்
கண்களை இமைக்கும்
கணத்தில் பதிலாய்
கடவுள் அவனே உரைத்திடுவான்!

நன்மையும் அவனே
தீமையும் அவனே
நாயகன் அவனே நம்மிறைவன்-கேள்
உன்னிலும் அவனே
என்னிலும் அவனே
ஊனுயிர் உலகும் அவனேதான்!

*
இது ஒருவகை இசைப்பா..!
நன்றிகள்!

புதன், 11 ஆகஸ்ட், 2010

தர்மம் என்றொரு தெய்வம்!

*
பாவ சூனியம் போக்கியே
பாவி நல்லவர் ஆக்கியே
தேவன் குன்றினில் சேர்த்திடும்
காவல் தெய்வமே தர்மமாம்!

தேடித் திண்ணலாம் யாவுமே!
மாடி வீட்டிலும் வாழலாம்!
வாடி நின்றிடும் போதிலே,
ஓடிச் செய்திடு நன்மைகள்!

வண்ண வண்ணமீன் வானிலே
சின்னக் கண்களால் நோக்கிடும்
எண்ணம் கூடியே தேங்கிடும்
வன்னம் காலையில் ஓடிடும்!

நீரின் கோலமே வாழ்க்கையாம்
பாரின் நாட்களும் கொஞ்சமாம்..
ஊரில் சிற்றிடம் வேண்டினால்
தேறு புண்ணியம் தேற்றிடு!

நன்றிகள்!

*இப்பா தேமா + கூவிளம் + கூவிளம் எனும்படி அமைந்த
வஞ்சிமண்டிலம் வகையைச் சார்ந்தது.

சனி, 3 ஜூலை, 2010

சாகாத வரம்வேண்ட!

*
சாகாத வரம்வேண்ட சமுத்திரமாய்ப் புகழ்வேண்ட
ஆகாவென் றனைவருமே அருமையென வாழ்த்திடவே
போகாத ஒருவாழ்க்கை பொருளோடு வேண்டுமெனில்
ஆகாத செயல்துடைத்து அருஞ்செயல்கள் புரிந்திடுவீர்!

பொன்னும்நல் மணியெதுவும் போகுமிடம் தெரியாது
சொன்னவைகள் யாவுமுந்தன் சொல்படியே நடக்காது
பண்ணதுவே அவனையெண்ணி பாடிக்கொண் டிருந்தாலே
எண்ணமது ஓர்நாளில் ஈடேறும் இதுதிண்ணம்!

செவ்விளநீர் நிறத்தொப்ப சிறப்பான வாழ்க்கையிதில்
அவ்விளநீர் வேண்டுமாயின் அறம்மட்டும் புரிந்திடுவீர்
அவ்வையொடு தமிழ்நூல்கள் அளித்திட்ட படிவாழ்ந்து
கவ்வைநீக்கி துன்பமிலாக் களிப்பதனை அடைந்திடுவீர்!

நன்றிகள்!


*இப்பா கலிமண்டிலம் வகையைச் சார்ந்தது.

வெள்ளி, 28 மே, 2010

வேண்டாம் மதுவாம்..!

-
கனவில் வந்திடும் மதுவினைக் கொஞ்சம்
....கலந்து இன்புறக் களித்திட நாளும்
மனனம் செய்திடும் மனதினை ஒருநாள்
....மறந்து மண்ணினில் வாழ்ந்திடும் வரத்தை
நினைந்து உன்னைநான் நித்தமும் கேட்பேன்
....நிகழ்த்து அற்புதம் நிறுத்திடு இதனை
புனைந்து வைப்பவர் யாரென அறியேன்
....புத்தி நற்பெற புத்திரர்க் கருள்வாய்!

தொலைக்க சென்றிடும் துயரெலாம் பறக்கும்
....தொகையும் நன்றென வீட்டினை அடையும்
அலைக்க ழித்திடும் விதியினைக் கடந்து
....அளவில் லாதொரு இன்பமும் சேரும்
கலைக்க வேண்டுமே மதுவெனும் பேயை
....குடும்பம் இன்முகம் அழகுறக் காணும்
நிலைத்து நின்றிடும் நம்திரு யாவும்
....நீரை நீக்கிட முனைந்திடும் பொழுதே!

-

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

கல்தோன்றி மண்தோன்றா!


*
நல்லோர்க்கு மட்டுமிங்கே துன்பம் ஏனோ..
நாள்தோறும் வல்வினைகள் கொள்தல் ஏனோ..
வல்லோர்கள் எந்நாளும் வலுத்தல் ஏனோ..
வல்லூற்றால் குருவிகளும் சாதல் ஏனோ..
வலிமைகொள்ப வன்மட்டும் வாழ்தல் என்றால்
வாழவைக்கும் சாமியெல்லாம் உண்டோ இங்கே..
கலிமுற்றிப் போனதுவே காலம் வற்றி
கல்தோன்றா மூத்தகுடி கரைதல் காணீர்.!


நன்றி!

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

இறை வழிபாடு!


*
உருவம் இன்றி உலகினிலே
....ஒத்து நடக்கும் செயல்களிலே
அருவம் போலே அமைவான்காண்
....அவனே தெய்வம் எனக்கொண்டான்
ஓரேர் உழவன் போலேயாம்
....ஒருவழி நெறியிற் செல்கையிலே
பாரேர் பிடித்து உழுதிடுவோன்
....பதராம் எமையுங் காப்பானே!

திருமால் அல்லா ஏசுவொடு
....திருப்பு கழ்பை பிள்குரானும்
அருகாய் வரட்டும் அனைவருமே
....அன்பால் எல்லாம் ஓர்கடவுள்
இரும்பால் ஆனது அல்லமனம்
....இருக்கும் அனைத்தும் நம்மதமாம்
உருவாக் கியவன் மனிதன்தான்
....உயர்வைப் பெறுதல் நம்மால்தான்!

நன்றி!