பக்கங்கள்

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

கல்தோன்றி மண்தோன்றா!


*
நல்லோர்க்கு மட்டுமிங்கே துன்பம் ஏனோ..
நாள்தோறும் வல்வினைகள் கொள்தல் ஏனோ..
வல்லோர்கள் எந்நாளும் வலுத்தல் ஏனோ..
வல்லூற்றால் குருவிகளும் சாதல் ஏனோ..
வலிமைகொள்ப வன்மட்டும் வாழ்தல் என்றால்
வாழவைக்கும் சாமியெல்லாம் உண்டோ இங்கே..
கலிமுற்றிப் போனதுவே காலம் வற்றி
கல்தோன்றா மூத்தகுடி கரைதல் காணீர்.!


நன்றி!

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

இறை வழிபாடு!


*
உருவம் இன்றி உலகினிலே
....ஒத்து நடக்கும் செயல்களிலே
அருவம் போலே அமைவான்காண்
....அவனே தெய்வம் எனக்கொண்டான்
ஓரேர் உழவன் போலேயாம்
....ஒருவழி நெறியிற் செல்கையிலே
பாரேர் பிடித்து உழுதிடுவோன்
....பதராம் எமையுங் காப்பானே!

திருமால் அல்லா ஏசுவொடு
....திருப்பு கழ்பை பிள்குரானும்
அருகாய் வரட்டும் அனைவருமே
....அன்பால் எல்லாம் ஓர்கடவுள்
இரும்பால் ஆனது அல்லமனம்
....இருக்கும் அனைத்தும் நம்மதமாம்
உருவாக் கியவன் மனிதன்தான்
....உயர்வைப் பெறுதல் நம்மால்தான்!

நன்றி!

வியாழன், 1 ஏப்ரல், 2010

இயற்கையின் இனிமை கேளீர் !


*
அன்ன மென்நடை காணோம்
....அச்சிறு பொட்டினைக் காணோம்.
சின்னக் கொடியிடை காணோம்.
....சேலைகள் எங்குமே காணோம்.
வன்னக் குழல்சடை தரிக்கும்
....வான்கரு மேகமுங் காணோம்
தின்னத் தின்னவே தெவிட்டாத்
....தீஞ்சுவைத் தமிழையுங் காணோம்!

மின்னும் பலவுடை பூட்டி
....மேலுடல் கீழுடல் காட்டி
நன்னும் தமிழ்உடை, செய்கை
....நடத்தையும் பேச்சையுந் தொலைத்தே
மன்னும் தமிழ்க்குடி அழித்தே
....மேலைநாட் டினரெனத் துடிப்பீர்
நன்றென் ஒருசொலைக் கேளீர்.
....நாடுக பண்புறு வாழ்வே!

முன்பந் நாட்களி லுரைத்த
....முன்னவர் மூடரு மல்லர்.
பின்ன வரிவரில் யாரும்
....பெரிதொரு அறிஞரு மல்லர்.
தென்ன வர்குடி நாளும்
....தழைத்திடத் தாங்கியே நிற்பீர்
அன்ன வர்வழி நடந்து
....அறத்தினைக் காத்திடப் புகுவீர்!
-

தமிழர் நிலை !


*
டாரம் கொண்டான் ஒருவன்
...கலிங்கம் வென்றான் ஒருவன்
படாது பகையை விரட்டிப்
....பாரில் எங்குஞ் சென்றான்
விடாது தொழில்கள் செய்து
....விளக்காய்த் தமிழை வளர்த்தான்
தொடாது தொல்லை நீக்கி
....தோல்வி எனுஞ்சொல் போக்கி

இமயம் வரையில் சென்று
....எட்டுத் திக்கும் பரந்து
சமயம் தமிழாய்க் கொண்டு
....சாதி மதங்கள் துறந்து
கமலம் போலே மணந்த
....காலம் இனிமேல் வருமா?
இமையில் நனையும் கண்ணீர்
....இனிவி ழிப்பும் வருமா?
-

தமிழ்! தமிழ்! தமிழ்!


*
உறுபகை அழிதல் வேண்டின்
....ஊழ்வினை கழிதல் வேண்டின்
அறுமுகன் அருளும் வேண்டின்
....ஆனவை அருகில் வேண்டின்
வரும்பிணி யாவும் போயே
....வாழ்க்கையுஞ் செழிக்க வேண்டின்
கரும்புகை படிந்த நெஞ்சில்
....களங்கமில் ஒளியும் வேண்டின்..

மனத்தினில் தமிழை என்றும்
....மலையென வணங்கிப் போற்றி
வனப்பினில் உயர்ந்த தேனை
....வாய்தனில் உரைத்து வாழ்வில்
தினம்புரி செயல்கள் யாவுந்
....தீந்தமி ழாலே கூறி
அனல்மிகு தொல்லை போக்கி
....அருளுடை வாழ்வை வாழ்வீர்.!

நன்றி!