பக்கங்கள்

சனி, 3 ஜூலை, 2010

சாகாத வரம்வேண்ட!

*
சாகாத வரம்வேண்ட சமுத்திரமாய்ப் புகழ்வேண்ட
ஆகாவென் றனைவருமே அருமையென வாழ்த்திடவே
போகாத ஒருவாழ்க்கை பொருளோடு வேண்டுமெனில்
ஆகாத செயல்துடைத்து அருஞ்செயல்கள் புரிந்திடுவீர்!

பொன்னும்நல் மணியெதுவும் போகுமிடம் தெரியாது
சொன்னவைகள் யாவுமுந்தன் சொல்படியே நடக்காது
பண்ணதுவே அவனையெண்ணி பாடிக்கொண் டிருந்தாலே
எண்ணமது ஓர்நாளில் ஈடேறும் இதுதிண்ணம்!

செவ்விளநீர் நிறத்தொப்ப சிறப்பான வாழ்க்கையிதில்
அவ்விளநீர் வேண்டுமாயின் அறம்மட்டும் புரிந்திடுவீர்
அவ்வையொடு தமிழ்நூல்கள் அளித்திட்ட படிவாழ்ந்து
கவ்வைநீக்கி துன்பமிலாக் களிப்பதனை அடைந்திடுவீர்!

நன்றிகள்!


*இப்பா கலிமண்டிலம் வகையைச் சார்ந்தது.