பக்கங்கள்

திங்கள், 22 பிப்ரவரி, 2010

தமிழன்னை..!!

"
செந்தமிழ் செம்மொழியாய் ஆனபின்னும்
வந்த மொழி பேசுகின்றார் - வழக்கொழிந்து
எந்த வ‌ழி என்றுசொல் லாம‌ற்போமோ..
எந்தை தாயுமென‌க்குரைத்த அன்புமொழி..!!

இந்த புவி மீததனில் இன்பங்கொண்டே
அந்த நாள் தொட்டு நாமுரைத்து வந்தோம்..!!
கந்தலாய்ப் போன சிறு மொழிகளாலே
காலதேவன் கையிற்தமிழ் சிக்கிடுமோ..!!

வட்டம் விரிவாக வேண்டும் நமக்குள்ளேயே..!!
வாதிட்டு தமிழை வளமாக்கல் வேண்டும்..!!
பட்டம் நூறு பெறுவதனால் பயனுமில்லை..!!
பெற்ற தாய்க்கீடாய்ப் பிறபெண்கள் ஆவதில்லை..!!

நட்டநடு ஆற்றினிலே விட்டகொடியல்ல தமிழ்..!!
எட்டுமருங் கெங்குமிளங் காற்றாக உலவுந்தமிழ்..!!
கொட்டியிசை எழுப்பியெமை குதிகொள்ள வைக்குந்தமிழ்..!!
வெட்ட வெட்ட தமிழ்மாந்தர் நெஞ்சம்தனில் வளருந்தமிழ்..!!

"

அன்பன்.,
க.அண்ணாமலை..!!
..

மழை..!!

"
வானம் வந்துதிரும் வரப்புகளி ரண்டுபடும்..!!
பாணம் போலவிழும்..பசிதீர்த்து வைக்கும்-பெரு
ஆனை போலிருக்கு மேகந்தரு மழையாலே..
தானந் தவமிரண்டும் தங்காமல் நடந்திடுமே..!!


அன்பன்.,
க.அண்ணாமலை..

சனி, 20 பிப்ரவரி, 2010

மீனாட்சி பாமாலை..!!

"
சந்தன மேனியில் சிந்தை நிறைந்திட..
சங்குக் கழுத்தினில் சந்தம் பதிந்திட..
வந்தவர் யாவரும் நின்று பணிந்திட..
வெந்தவர் நொந்தவர் வந்து வணங்கிட..!!

எத்தரும் பித்தரும் உடனரண் டோடிட..
சித்தரும் முத்தரும் கவிபல பாடிட..
அத்தரும் அலருமாய் மேனி மணத்திட..
நித்தமுன் புகழை நான் கூறிடவே..!!

உத்தரவொன்று எமக்கு நீ அருள்வாய்..
நித்திரையின்றி உனைநிதந் தொழவே..
பத்தரை மாற்றுப் பசும்பொன் அங்கம்..
சித்திரை மாதத்து வெயிலையும் மிஞ்சும்..!!

தித்தித்து நினைவிற் தேனாய் உருளும்..
முத்துப்பற்கள் இளநகையை உமிழும்..
எத்திசை நோக்கினும் பக்தர்கள் திரளும்..
சத்தெனக் கருள்வாய் சாவிலு முனைப்பாட..

கண்களிற் கண்டேன் காலைச் சூரியன்..
பண்களிற் கண்டேன் பரவிடுமுன் புகழ்..
எண்களிற் கூறவு மியலுமோ உன்திரு..
தண்புகழ் தனையே தளராமற் தருவாய்..!!

சித்தி அளித்திடும் சிலவரம் வேண்டேன்..
முத்தி அளித்திடும் முறைமையும் வேண்டேன்..
பத்தி நிறையவுனைப் பரவசமாய்ப் பாடத்..
தத்தித் தொடர்ந்தால் தனதுயிர் வாழும்..!!

கண்டவர் கண்டிடத் தோன்றும் உருவம்..
காலனின் காலைச் சுற்றிய அரவம்..
வென்றிட வேண்டியே இங்கு நாம் வருவோம்..
நின்றிடம்மா நித்தம் என்மன வீட்டினில்..!!

மீனாட்சி பாமாலை மிகையற்ற பூமாலை..
தானாக வரவில்லை தகவலேதும் சொல்லவில்லை..
ஏனோ தோன்றியது எழுதிவைத்தேன் பாக்களிலே..
தேனாகப் பாய்கிறதே தேவியைப் பாடுபவை..!!

"
அன்பன்.,
க.அண்ணாமலை..!!
..

வியாழன், 18 பிப்ரவரி, 2010

தமிழ்ப்பாக்கள் வடித்திடவே....!!!!!

"
தெள்ளுற்ற தமிழமுதிற் பாக்கள் நூறு ..
தெளிதேனிஞ் சுவையுடனே ஆக்கஞ் செய்ய ..
அள்ளிப் பருகிடவே தேவையில்லை அலைகடலும்..
உள்ளத்திற் தமிழ்வியந்து உருசெய்க தானேவரும்..!!
"
அன்பன்
க.அண்ணாமலை..