"
சந்தன மேனியில் சிந்தை நிறைந்திட..
சங்குக் கழுத்தினில் சந்தம் பதிந்திட..
வந்தவர் யாவரும் நின்று பணிந்திட..
வெந்தவர் நொந்தவர் வந்து வணங்கிட..!!
எத்தரும் பித்தரும் உடனரண் டோடிட..
சித்தரும் முத்தரும் கவிபல பாடிட..
அத்தரும் அலருமாய் மேனி மணத்திட..
நித்தமுன் புகழை நான் கூறிடவே..!!
உத்தரவொன்று எமக்கு நீ அருள்வாய்..
நித்திரையின்றி உனைநிதந் தொழவே..
பத்தரை மாற்றுப் பசும்பொன் அங்கம்..
சித்திரை மாதத்து வெயிலையும் மிஞ்சும்..!!
தித்தித்து நினைவிற் தேனாய் உருளும்..
முத்துப்பற்கள் இளநகையை உமிழும்..
எத்திசை நோக்கினும் பக்தர்கள் திரளும்..
சத்தெனக் கருள்வாய் சாவிலு முனைப்பாட..
கண்களிற் கண்டேன் காலைச் சூரியன்..
பண்களிற் கண்டேன் பரவிடுமுன் புகழ்..
எண்களிற் கூறவு மியலுமோ உன்திரு..
தண்புகழ் தனையே தளராமற் தருவாய்..!!
சித்தி அளித்திடும் சிலவரம் வேண்டேன்..
முத்தி அளித்திடும் முறைமையும் வேண்டேன்..
பத்தி நிறையவுனைப் பரவசமாய்ப் பாடத்..
தத்தித் தொடர்ந்தால் தனதுயிர் வாழும்..!!
கண்டவர் கண்டிடத் தோன்றும் உருவம்..
காலனின் காலைச் சுற்றிய அரவம்..
வென்றிட வேண்டியே இங்கு நாம் வருவோம்..
நின்றிடம்மா நித்தம் என்மன வீட்டினில்..!!
மீனாட்சி பாமாலை மிகையற்ற பூமாலை..
தானாக வரவில்லை தகவலேதும் சொல்லவில்லை..
ஏனோ தோன்றியது எழுதிவைத்தேன் பாக்களிலே..
தேனாகப் பாய்கிறதே தேவியைப் பாடுபவை..!!
"
அன்பன்.,
க.அண்ணாமலை..!!
..
சனி, 20 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக