பக்கங்கள்

புதன், 16 பிப்ரவரி, 2011

பிரம்மனிடம் சில கேள்விகள்!ள்ளிரவில், ஓர் நடுக்காட்டில்
நான்முகன் என்னிடம்
நன்றாய்ச் சிக்கினான்.
நானோ பொடியன்.நாயகன் அடியன்.
நழுவ விடாமல் அவனை நலம் விசாரிக்கத் துவங்கி விட்டேன்.


கேள்விகள் சிவப்பிலும்,
பதில்கள் கறுப்பிலும்.

பிறப்பால் விளைவது
பூமியில் என்ன?
பிரம்மனை நான்கேட்டேன்-கெஞ்சும்
குரலால் தான்கேட்டேன்!

இறப்பால் விளைவது
என்னஇவ் வுலகில்?
எனையே அவன்கேட்டான்- கேள்வியை
மாற்றிப் புடம்போட்டான்!

ம்குர லுக்கும்
நாயகன் செவியை
நன்றாய்ச் சாய்க்கின்றான்-உலகில்
எனையும் பார்க்கின்றான்!


எம்குர லுயர்த்தி
இன்னும் இரண்டொரு
கேள்விகள் கேட்போமே-என்னதான்
செய்வான் பார்ப்போமே!

காட்டிலும் மேட்டிலும்
கடவுளைத் தேடியோர்
கூட்டமும் அலைகிறதே?-இதனால்
குடும்பமும் தொலைகிறதே?

வீட்டினில் வைத்தெமை
வணங்கிடு போதும்
காடும் மேடெதற்கு-நீயேன்
கானகம் போவதற்கு?

சரி!இப்படி மாற்றிக்கேட்டுப் பார்ப்போம்!

ல்லறம் உள்ளவர்
துறவறம் நாடிட
உலகே வீண்தானோ?-இப்படி
உழல்வதும் சரிதானோ?


இல்லறம் துறவறம்
இரண்டும் நல்லறம்
ஆற்றினில் ஓடியபின்-நீரும்
ஆழ்கடல் அடைந்திடுமே!

(எல்லா ஆறுகளும் கடலுக்குத்தானாம்)
அப்படியா..? அடுத்ததை வீசினேன்!

பிறந்திடும் உயிர்கள்
ஓர்நாள் இறக்கும்
இறந்தபின் என்னாகும்?-சொல்லென்
வாழ்நாள் பொன்னாகும்!

சிறந்திடும் ஆழ்கடல்
சிறுதுளி தந்திடும்
மேகமென் றேயாகும்-அதுவே
மீண்டும் ஆறாகும்!

பிரம்மன் மிகப் பொறுமையுடன் பதிலளித்தான்.

ழு பிறப்பே
எவர்க்கும் என்றால்
இறைவா நீஎதற்கு?-இங்கே
நாங்கள் வணங்குதற்கு!


பாழும் மனிதா
கேள்விக ளாலே
படுத்தி யெடுப்பதுமேன் -என்னைப்
பாவியென் றாக்குவதேன்!

காத்திருந்த நேரம் வந்துவிட்டது.

த்தனை கடினம்
எங்களின் வாழ்வில்
ஏற்படுத் தும்இறைவா!-பிறந்தே
உலகில் இன்புறவா!


எத்தனை கேள்விகள்
இன்னமும் உளதோ?
என்னைப் போகவிடு!-இலையேல்
இங்கே சாகவிடு!

பிரம்மன் நோகத்தொடங்கினான்.இதைத்தானே எதிர்பார்த்தேன்.

பிரம்மன் இறந்தால்
பிறப்பது எங்கனம்?
பூமியில் பிறப்பதற்கே-பிரம்மா
இத்தனை பயமெதற்கு?

பரமன் உடுக்கையை
புரட்டுதல் போலே
புவியினை அசைப்பானே-கண்டும்
பிறந்திட நினைப்பேனோ!

தெரியாதது போல் விளித்தேன்.

னக்கும் மேலே
ஒருவன் உண்டோ
ஒருநொடி காண்பேனோ?-சிற்சில
கேள்விகள் கேட்பேனோ?


மனதை மயக்கும்
மதியுனக் கெனினும்
மயங்கிட மாட்டேனே - சாபம்
மறுமுறை கூட்டேனே!

ஏற்கனவே பெற்ற சாபத்தில் பிரம்மன் நிறைய பட்டுவிட்டான் போலும்.
போட்டேன் ஒரு கட்டளை.


போதும் பிரம்மா
பொய்களை நிறுத்து
புண்ணியம் கொடுத்துவிடு!-பூமியில்
பிறப்பினை நிறுத்திவிடு!

சற்றே புன்னகையுடன், பிரம்மன் தீர்க்கமாக என்னைப்பார்த்து சொன்னான்.

ன்மேல் என்றும்
எள்முனை தவறிலை
என்தொழில் நின்றாலும்-மனிதா
உன்தொழில் நிற்காதே!

மனிதா
உன்தொழில் நிற்காதே!

அவனே தொழிலை நிறுத்தினாலும், நாம் நிறுத்த மாட்டோமா..?
விளங்கத் தொடங்கியது..

பிரம்மன் சொன்னதில்
பிரமை பிடித்தே
பேதைமை ஆகியதே-கேள்விகள்
மறதியென் றேகியதே!


பரமனில் பிரமனில்
பாரினில் தவறிலை
பாழும் மனதினுள்ளே - பாராய்
பலவிதத் தவறுகளும்!

பாராய்
பலவிதத் தவறுகளும்!

ன்னை நானே நொந்த பொழுதில்

இடத்தை விட்டே அகன்று விட்டான்
அய்யன் நான்முகன் அறிவிற் சிறந்தவன்,
அருளன் வாணியின் அழகிய வேந்தன்!


நன்றிகள்!

தொடுப்பு:
*இது ஒருவகை இசைப்பா.
*அந்த ஓவியம் மிக அழகு!
*இனியும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடவுளிடம் கேள்விகள் கேட்கலாம்.

:)

4 கருத்துகள்:

திகழ் சொன்னது…

நன்றாக இருக்கிறது நண்பரே

கேள்விக்கணைகளைத் தொடுங்கள்
நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம்

உங்களால் என்
உள்ளம் தெளிவு அடையும்

இசைப்பா அருமை

//என்மேல் என்றும்
எள்முனை தவறிலை
என்தொழில் நின்றாலும்-மனிதா
உன்தொழில் நிற்காதே!

மனிதா
உன்தொழில் நிற்காதே!
//


வாழ்த்துகள்
/

அண்ணாமலை..!! சொன்னது…

@ திகழ்,

மிக்க நன்றிகள் நண்பரே!
கேள்விகளால் நம் உள்ளம்
தெளிவு பெறட்டும்!

ஷர்புதீன் சொன்னது…

:-)
entry sir

அண்ணாமலை..!! சொன்னது…

வாங்க! வாங்க! :)

கருத்துரையிடுக