பக்கங்கள்

புதன், 29 டிசம்பர், 2010

கடவுள் என்பவன் யார்?



கடவுள் என்பவன்
யாரென் றறிய
யாரைக் கேட்பேன் அறியவில்லை! - சரி
கடவுச் சீட்டு
தருபவன் யார்தான்
எங்கிருந் தென்றும் புரியவில்லை!

இசைபட ஒலிக்கும்
இன்பமுங் கொடுக்கும்
கருவியில் நாதம் எவ்வாறோ-நம்
வசைகளைப் போக்கும்
வடிவமும் மறைத்த
கடவுளும் உள்ளான் அவ்வாறே!


விண்ணையும் மண்ணையும்
விளையாட் டாய்சிறு
விளக்காய்க் காப்பதும் இறைவனென்றால்-அம்
மன்னவன் மக்களை
மாண்புற உலகினைக்
காக்க மறந்தே அழிப்பதுமேன்?

உலகினை உருக்கி
உயர்வாய்க் கொடுத்த
உத்தமன் என்றும் நல்லவனே-நிதம்
அலகினில் சிக்கிய
இரையாய் அதனை
அழித்தொழிப் பதுவும் மானிடனே!


கேள்விக ளனைத்தும்
கிளம்பும் நொடியில்
பதிலாய் மூளையில் தருவதுயார்-பொன்
தூள்களைப் போலே
என்னுள் பரவி
துயர்விடும் பதிலினைத் தருவதும்யார்?

நீரினைக் கொழிக்கும்
நிலத்தினில் பரவும்
நெடுமரம் தன்னிலும் உயிராக-அதன்
வேரென் றிருந்து
விழுதுகள் செழிக்க
வைத்திடும் இறைவன் அவனேதான்!


உன்னிலும் இருந்து
உயிரையும் இயக்கி
ஒருநொடி கேள்வியென் றாகிடுவான்-பின்
கண்களை இமைக்கும்
கணத்தில் பதிலாய்
கடவுள் அவனே உரைத்திடுவான்!

நன்மையும் அவனே
தீமையும் அவனே
நாயகன் அவனே நம்மிறைவன்-கேள்
உன்னிலும் அவனே
என்னிலும் அவனே
ஊனுயிர் உலகும் அவனேதான்!

*
இது ஒருவகை இசைப்பா..!
நன்றிகள்!

2 கருத்துகள்:

தமிழ் சொன்னது…

வினாவும் அவனே
விடையும் அவனே

உண்மை நண்பரே

தமிழுடன்
திகழ்

அண்ணாமலை..!! சொன்னது…

@ திகழ்

மிக்க நன்றிகள் தமிழறிஞரே!

கருத்துரையிடுக